SPECIAL Notice – Graduate Teaching Exam (Vacancies) 2023
*அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு*
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான விஜித் K. மலல்கொட, A.H.M.N.நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழாம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்காக போட்டிப் பரீட்சையை நடத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, 04 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
போட்டிப் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் சட்ட விரோதமானது எனவும், இதற்காக அமைச்சரவை உரிய முறையில் தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெற்றிடங்கள் காணப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டிருந்தனர்.
எனினும், அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்றும், இன்றும் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனை இடம்பெற்ற நிலையில், போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.