New Changes in education policy 2024

New Changes in education policy 2024

UPDATED ON 05.12.2023

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு மாணவர்களும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி தெரிவித்துள்ளது.

இதன்படி, நான்கு வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.

அதற்கமைய, சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 7 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

க.பொ.த பொதுத்தேர்வை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு,4 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும்.

இந்த செயற்பாட்டை திடீரென செய்ய முடியாததுடன், 1, 6 மற்றும் 10 ஆகிய தரங்களில் ஆரம்பிக்கும் வகையில் ஆரம்பம், கனிஷ்ட இளநிலை மற்றும் சிரேஷ்ட இளநிலை என்ற அடிப்படையில் மூன்று வகைப்படுத்தலின் கீழ் இது மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தாம் பயணிக்க வேண்டிய எதிர்கால திசையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் தயார் செய்யப்பட வேண்டும் “என தெரிவித்துள்ளார்.

2024 இலிருந்து இலங்கை பாடசாலைகளில் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்கள்

2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை இலங்கை பாடத்திட்டத்தில் அறிமுகப் படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 6 முதல் 13 வரை குறித்த பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன.

சர்வதேச தரத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.