CONSTRUCTION OF 25,000 HOUSES WITH 20KW SOLAR ROOF FOR LOW INCOME COMMUNITY IN NORTHERN PROVINCE
வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் ( 25,000) சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் கௌரவ ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த இருபத்தையாயிரம்( 25,000) வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் ம ற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காத எனினும், தகுதியுள்ள பயனாளிகள் இருப்பின் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் விண்ணப்பங்களை பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலுக்கு அமைய மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டுதல்களுடன், பிரதேச செயலாலர்களால் வீட்டுத்திட்ட பயனாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்த வீட்டுத்திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காத, தகுதியுள்ள விண்ணப்பதாரிகள் இருப்பின், உடனடியாக தங்களின் பிரதேச செயலகத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு, அது நிறைவு செய்யப்படாதவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த புதிய வீட்டுத்திட்டத்தினூடாக காணி அற்றவர்களுக்கு அரச காணியில் தொகுதி(CLUSTER ) வீடமைப்பு திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது.
710 சதுர அடியில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீடுகளின் கூரைகளில் ஆயிரம் (1000) சதுர அடியில் சூரிய மின் படலங்கள் (SOLAR PANEL) பொருத்தப்படவுள்ளன. மிகுதியாக எஞ்சும் பகுதிக்கு சீமெந்து தரை இடப்படும்,
வெளிநாட்டு தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றினூடாக செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்படும் இந்த இருபத்தையாயிரம் ( 25,000) வீடுகளின் கூரைகளில் பொருத்தப்படவுள்ள சூரிய மின்படலத்திலிருந்து (SOLAR PANEL) உற்பத்தியாகும் மின்சாரத்தை இருபது (20) வருடங்களுக்கு மாத்திரம், வீட்டு உரிமையாளர்கள், குறித்த முதலீட்டு நிறுவனத்திற்கு வழங்கவேண்டும்.
எனினும் வீட்டு நிர்மான பணிகளுக்கான கட்டணம் எதுவும் பயனாளிகளிடமிருந்து அறவிடப்படாது.
எனவே, இந்த திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பங்களை சமர்பிக்காதவர்கள் உடனடியாக பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த விசேட வீட்டுத்திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் காணப்படுமாயின், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பின்வரும் முறையில் நேரடியாக அறிவிக்க முடியும்.
தொலைபேசி இலக்கம் – 021 221 93 70
மின்னஞ்சல் – plangov@np.gov.lk
முகவரி – ஆளுநரின் செயலாளர்,
ஆளுநர் செயலகம்,
பழைய பூங்கா,
சுண்டுக்குழி,
யாழ்ப்பாணம்.