8000 TEACHERS APPOINTMENT IN JUNE 2023

8000 TEACHERS APPOINTMENT IN JUNE 2023

ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வியியற் கலாசாலைகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்காக தெரிவாகியுள்ள 2500 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 350 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு நேற்று (09.06.2023) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 16.06.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே மேலதிக விபரங்களை வடமாகாண சபை இணையத்தளம் www.np.gov.lk., வடமாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.cdumin.np.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.