Special announcement by the Minister of Education regarding the opening of schools
தரம் ஒன்று மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சற்று தாமதமாகி 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பாடசாலைகள் 2021 டிசம்பர் 23 அன்று மூடப்பட்டு, புதிய கல்வியாண்டிற்காக 2022 ஜனவரி 03 அன்று மீண்டும் திறக்கப்படும். கோவிட் தொற்று காலக்கட்டத்தில் விடுபட்ட பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியிருப்பதால் முதல் தவணை ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும்.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 3ம் வாரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரியிலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை சற்று தாமதித்து ஏப்ரலில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும்.
இது தொடர்பான சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு தற்போது வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் அதனை பயன்படுத்தி அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஏனைய தரங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தரம் ஒன்றின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.