SCHOOL STARTS IN 4 PHASES-MINISTRY OF HEALTH

SCHOOL STARTS IN 4 PHASES

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாணவர்களின் கல்வி தேவை மாத்திரமன்றி, அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அவசியமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளை மீள திறக்கின்றமை நடைமுறை மற்றும் பாடசாலைகளை நடத்திச் செல்லும் விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் அடங்கிய பரிந்துரைகளை கல்வி அமைச்சிடம், சுகாதார அமைச்சு நேற்றைய தினம் (21) கையளித்திருந்தது.

இதன்படி, முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் மன ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையினால், அந்த பிரிவுகளுக்கான வகுப்புக்களை முதலில் ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான இணைய வழி கல்வி முறைமை வெற்றியளிக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் நடைமுறை

முதலாம் கட்டம் : முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவுகள் முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இரண்டாம் கட்டம் : முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான 200 மாணவர்களுக்கு அதிக மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும், அனைத்து பிரிவுகளிலும் 100க்கு குறைவான மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டும்.

மூன்றாம் கட்டம் : அனைத்து பாடசாலைகளிலும் 10, 11, 12 மற்றும் 13ம் தர வகுப்புக்களும், 200க்கு குறைவான மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டும்.

நான்காம் கட்டம் : அனைத்து வகுப்புக்களும் திறக்கப்பட வேண்டும்.

ஒரு கட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமாயின், வைரஸ் தொற்று தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகனத்தினர் மற்றும் மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவோர் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவ்வாறு பெற்றுக்கொள்வதற்கு ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியை தெளிவூட்ட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கொவிட் தொற்றுக்கான நோய் அறிகுறிகளுடனான மாணவர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில், மேலதிக சிகிச்சைகளுக்காக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய, சிறுவர் நோய் அல்லது தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர்களிடம் காண்பிக்க வேண்டும். இதையடுத்து, சிறார்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டுமாயின், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.